பிரபலமான சுற்றுலா தளமான லெஸ்டர் சதுக்கத்தில் ‘Scenes in the Square’ என்ற பெயரில் உலகின் புகழ்பெற்ற திரைப்பட, கார்ட்டூன் கதாபாத்திரங்களின் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஹாரி பாட்டர், மிஸ்டர் பீன், பேட்மேன், வொண்டர் வுமன் உள்ளிட்ட பலரின் சிலைகளுக்கு அடுத்ததாக தற்போது ராஜ்–சிம்ரன் சிலையும் இடம் பெற்றுள்ளது.
1995 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டாகிய தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, 4 கோடி ரூபாயில் தயாராகி 102 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும், இந்த படம் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக திரையிடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கட்டிடத்தின் வெளிப்புற கிழக்கு பக்க மாடியில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, படத்தின் புகழ்பெற்ற போஸை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஷாருக்கான் மற்றும் கஜோல் இருவரும் நேரில் கலந்து கொண்டனர்.
திரைப்பட ரசிகர்களுக்கு இதனால் ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி கிடைத்துள்ளது. முக்கியமாக, படத்தில் ராஜ், சிம்ரன் இருவரும் லெஸ்டர் சதுக்கத்திலேயே முதன் முதலாக அறியாமல் சந்திக்கும் காட்சி இடம்பெறுவதாகவும், அந்த நினைவைக் கொண்டாடும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் பொழுதுபோக்கு துறையின் மையமாக கருதப்படும் லெஸ்டர் சதுக்கத்தில் இந்திய திரைப்படத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தச் சிலை, ஹாலிவுட் கதாபாத்திரங்களுடன் இணைந்து நிற்பதால், சர்வதேச அளவில் இந்திய சினிமா உருவாக்கும் தாக்கத்தையும் ஈர்ப்பையும் வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிடப்படுகிறது.



Leave a Reply