தாழ்த்தப்பட்ட சாதியினரால் சமஸ்கிருதம் கற்க முடியாது என்று பேசியதோடு, சாதி ரீதியாக விமர்சித்த பேராசிரியை மீது கேரளாவில் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் கேரளா பல்கலைக்கழகத்தின் கரிவட்டம் கேம்பஸில் விபின் விஜயன் என்ற இளைஞர் சமஸ்கிருதத்தில் பி.ஹெச்.டி ஆய்வு வந்துள்ளார். இவர், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இதே, பல்கலையில் சமஸ்கிருதத்துறை தலைவராக சி.என். விஜயலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த அக்டோபர் 15ம் தேதி விபின் விஜயன் தனது ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். இதில், கையொப்பமிட விஜயலட்சுமி மறுத்து விட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து, நவம்பர் 8ம் தேதி மீண்டும் பேராசிரியை விஜயலட்சுமியை சந்தித்த விபின் தனது ஆய்வுக்கட்டுரையை ஏற்றுக் கொண்டு கையொப்பமிட வேண்டியுள்ளார். ஆனால், இதனை ஏற்க மறுத்த விஜயலட்சுமி, ‘தாழ்த்தப்பட்ட சாதியினரால் சமஸ்கிருதத்தை கற்று விட முடியாது’ என்று கடுமையாக பேசியுள்ளார். அதோடு, விபின் அங்கிருந்து சென்ற பிறகு, அவர் நின்ற இடத்தை தண்ணீரால் கழுவியுள்ளார். பிற, பேராசிரியர்கள் முன்னிலையிலேயே, இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், மனவேதனையடைந்த விபின் கழவட்டம் போலீசில் புகாரளித்தார்.
தனது புகாரில், கடந்த 2015ம் ஆண்டு தான் MPhil படிக்கும் போதும், இந்த பேராசிரியை தன்னை சாதிரீதியாக துன்புறுத்தியதாக விபின் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, உள்நோக்கத்துடன், தாழ்த்தப்பட்ட மக்களை விஜயலட்சுமி அவமதித்தாக கூறி, ஜமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள விஜயலட்சுமி, விபினின் ஆய்விலுள்ள குறைபாடு மற்றும் சமஸ்கிருதத்தில் அவருக்குள்ள அறிவு குறை காரணமாகவே தான் கையொப்பமிட மறுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், மற்றவர்களின் படைப்புகளில் இருந்து சில பகுதிகளைத் திருடி தனது ஆய்வுக்கட்டுரையில் விபின் சமர்ப்பித்திருந்தார். ஆய்வுக்கட்டுரைக்குரிய தகுதியை விபினின் கட்டுரை கொண்டிருக்கவில்லை’ என்றும் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள விபின், ‘எனது கட்டுரை தகுதியானதாக இல்லை என்று விஜயலட்சுமி கூறுகிறார். இவரது வழிகாட்டுதலின் கீழ்தான் நான் எம்.பில். பட்டம் பெற்றேன். இப்போது ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது ஆய்வுக்கட்டுரையை குறை கூறுகிறார்’ என்று பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து கூறுகையில், ‘இந்த பிரச்னை தொடர்பாக விசாரிக்க உயர்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். தேவையான நடவடிக்கை எடுக்க, பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் உத்தரவிட்டுள்ளேன் ‘ என்று தெரிவித்துள்ளார்.
இவர், ஸ்ரீசங்கராச்சார்ய சமஸ்திருத கல்லூரியில் விபின் விஜயன் இளங்கலை , முதுகலை பட்டம் பெற்றவர். பி.எட், எம்.எட் பட்டங்களை கேரளா பல்கலையில் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரள பல்கழைக்கழகத்தின் கரியவட்டம் வளாகத்தின் எஸ்.எப்.ஐ. அமைப்பின் தலைவராகவும் விபின் விஜயன் உள்ளார். இவர், கேரள ஆன்மீக குரு சட்டம்பி சுவாமிகள் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்ததாக தெரிகிறது. தேர்வுக் குழுவின் தலைவர் விபினுக்கு முனைவர் பட்டம் வழங்க பரிந்துரைத்த நிலையில், விஜயகுமாரி துணைவேந்தர் டாக்டர் . மோகனன் குன்னுமாலுக்கு கட்டுரை குறித்து ஆட்சேபனைகளை எழுப்பி கடிதம் எழுதியிருக்கிறார்.
விபின், ஆய்வு செய்த சட்டம்பி சுவாமி கேரளாவின் சாதிய சமூகத்தில் நிலவிய அநீதிக்கு எதிராகப் போராடிய சமூக சீர்திருத்தவாதியும் ஆன்மிக குருவுமாகிய ஸ்ரீ நாராயண குருவுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். ஶ்ரீ நாராயணகுருவைப் போலவே சட்டம்பி சுவாமியும் பிராமணச் சடங்குகளுக்கு எதிராகப் போராடிய சீர்திருத்தவாதியாகவும் கேரள சமூக மறுமலர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply