கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலய வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில், சைவம்–வைணவம் ஒருங்கே நிற்கும் தனித்துவத்துக்குப் பெயர் பெற்றது. இவ்விடத்தில் ஒரே நேரத்தில் நடராஜரும் கோவிந்தராஜ பெருமாளும் தரிசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 108 திவ்யதேசங்களில் 41வது திவ்யதேசமாக இக்கோயில் உயர்வாக திகழ்கிறது.
கிழக்கு நோக்கி ராஜகோபுரம் உடன் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் புண்டரீகவள்ளி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கொடிமரம், மகாமண்டபம் உள்ளிட்ட அமைப்புகள் உள்ளன. மூலவர் கோவிந்தராஜர் அனந்தசயன கோலத்தில் அருள்பாலிக்க, உற்சவர் தேவாதிதேவன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
இக்கோயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவடைந்து, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (வெள்ளி) மிகுந்த பக்தி, மரியாதையுடன் நடைபெற்றது.
கடந்த 30ஆம் தேதி முதல் ஆயிரம் கால மண்டபம் முன்பு யாகசாலை பூஜைகள் தொடங்கி 8 கால பூஜைகள் நடைபெற்றன. இன்று இறுதி கால பூஜை, பூர்ணாஹுதி மற்றும் மகாதீப ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.
பின்னர் பட்டாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவில் முழுவதும் வலம் வந்து, கோபுர கலசங்களில் வேதமந்திர ஓசையுடன் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
இந்த திருவிழாவை கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, சுவாமி தரிசனம் செய்து, சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.



Leave a Reply