சி பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற சிறப்பு பூஜை

Spread the love

கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிக்காக பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தேசிய மகளிர் அணி செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக நிற்பவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிச்சயம் வெற்றி பெற்று துணை குடியரசுத் தலைவராக பதவியேற்கிறார். தமிழராக அவர் உயர்ந்த பதவியை வகிப்பது பா.ஜ.க தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்,” என்றார்.

அவர் தொடர்ந்து, “கோவையில் மட்டும் 25 கோவில்களில் வெற்றிக்காகவும் பிரதமர் நரேந்திர மோடி நலனுக்காகவும் அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. ஆனால் தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல் தி.மு.க. தனது செயலால் சிறுமைப்படுத்துகிறது. திமுக தொடர்ந்து தமிழர் நலனைக் கூறினாலும், நடைமுறையில் துரோகம் செய்கிறது,” என்றும் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சி பிரச்சனைகள் குறித்து வானதி சீனிவாசன் கூறியதாவது: “தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் உள்ளன. அவற்றை ஒன்றிணைத்து வலுப்படுத்துவது பா.ஜ.க-வின் நோக்கம். அ.தி.மு.க. பிரச்சனைகள் கூட்டணி வெற்றியை பாதிக்காது. அந்தந்த கட்சி பிரச்சனைகளை அந்தந்த கட்சித் தலைவர்கள் சரி செய்து விடுவார்கள். 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீடு திருப்புவதே எங்களின் இலக்கு. கூட்டணிக் கணக்கு தேர்தல் வெற்றியை உறுதி செய்யும்.”

மேலும், “செங்கோட்டையன் ஹரித்வாருக்கு சென்றது மத ரீதியான பயணம். அதை அ.தி.மு.க. – பா.ஜ.க. பிரச்சனையோடு இணைத்து பேசுவது தவறு. அவர் அமித்ஷாவை சந்தித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை,” என்றும் வானதி சீனிவாசன் தெளிவுபடுத்தினார்.

நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார், பொதுச் செயலாளர் சுதாகர், இளங்கோவன், செல்வகுமார், விஜயா ரவி, முன்னாள் மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பாலசுப்பிரமணியம், வேலுமயில், ராஜன், அர்ஜுனன், மணிகண்டன், கிருஷ்ண பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.