வடகோவை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் – பயணிகள் கோரிக்கை

Spread the love

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பயணிகளின் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி அப்துல் கோயா தலைமை தாங்கினார். தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் நடராஜன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையமாக கோவை திகழ்கிறது. எனவே, கோவை ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரப்பட்டது.

மேலும், கோவை–மங்களூரு ரயிலை போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும். வடகோவை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் வடகோவை ரயில் நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது.

இதில் பேசுகையில், சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் அப்துல் கயூப் கோயா, பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அவசியம் எனத் தெரிவித்தார்.

மனுவில் வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள்: வடகோவை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். ரயில்வே பாதுகாப்பு படையின் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். மின் விளக்குகள் வசதி ஏற்படுத்த வேண்டும். இருகூர் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

அதேபோல், செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் பழைய 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகளை மாற்றி புதிய பெட்டிகள் இணைக்க வேண்டும். கோவை ரயில் நிலைய மெயின் நுழைவு வாயிலில் அதிக அளவில் ஏற்படும் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார், கோவை ரயில் பயணிகள் சங்க தலைவர் ஜமீல் அகமது, சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.