அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2022 ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி ஆகியோர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதில், பொதுச்செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு நடக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, உரிமையியல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி பி.பி. பாலாஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், எடப்பாடி பழனிசாமியின் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினராக இல்லாதவராகும். எனவே அவர் இந்த வழக்கை தொடர முடியாது” என்று வாதிட்டார்.
இதையடுத்து, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கில் சூரியமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



Leave a Reply