அமெரிக்க வேளாண் பொருட்கள் இந்தியாவிற்கு அனுமதி இல்லை – பிரதமர் மோடி உறுதி

Spread the love

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25% சதவீத வரி விதிப்பதாகவும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்காக அபராத தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதன் காரணமாக இந்தியா – அமெரிக்கா இடையேயான வணிக உறவு கேள்விக்குறியானது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளும் நடந்து வந்த நிலையில், அமெரிக்காவில் உற்பத்தியாகும் சோளம், சோயா பீன்ஸ் உட்பட பல தானியங்களையும், அசைவ பாலையும் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய தடையில்லாத நிலைமையை உருவாக்க வேண்டும் என அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அழுத்தம் தந்தது.

அமெரிக்காவில் உற்பத்தியாகும் அசைவ பால் இறைச்சிகளில் இருந்து தயாரிக்கப்படும் வகையாகும். அதாவது கால்நடைகளுக்கு தீவனங்களில் இறைச்சிகள் கலந்து கொடுக்கப்பட்டு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பால் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தானியங்களையும் இந்தியாவில் இறக்குமதி செய்ய அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது.

இந்திய சந்தை வேளாண் மற்றும் பால் உற்பத்திக்கு எப்போதும் மிகப்பெரியது என்பதால் அமெரிக்கா, இந்தியாவில் வேளாண் பொருட்களை முதலீடு செய்து லாபம் பார்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தது. ஆனால் இந்த விஷயத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடக்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்ததால், இந்திய பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதித்து டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். பின்னர், அதுவே 50 சதவிகிதமாக உயர்த்தப்பபட்டதுமு.

இது குறித்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய விவசாயிகளின் நலனுக்கே மத்திய அரசு முன்னுரிமை கொடுக்கும்.

என் தனிப்பட்ட நலனில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும், இந்திய விவசாயிகளின் நலனுக்காக அமெரிக்க வேளாண் பொருட்கள் இறக்குமதியை மத்திய அரசு சம்மதிக்காது. இந்திய பொருட்களுக்கு எவ்வளவு கூடுதல் வரி விதித்தாலும் அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை. இந்திய விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எவ்வளவு விலை கொடுக்கவும் தயார். அமெரிக்காவின் பருத்தி, சோளம், சோயா பீன்ஸ் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்தால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் அமெரிக்க வேளாண் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.