பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. இந்தநிலையில் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது.
கடந்த ஏப்ரல் மாதம் கூட்டணி உருவானதில் இருந்தே அதிமுகவும், அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கூட்டணி அமைத்தபோதே, உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று கூறினார். இதை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்தார். கூட்டணி ஆட்சியில்லை. அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று பதிலளித்தார்.
இந்தநிலையில் தமிழ் நாளிதழான தினத்தந்திக்கு கடந்த மாதம் அமித்ஷா அளித்த பேட்டியில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என்று கூறியிருந்தார். மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் அமித்ஷா எடுப்பதே இறுதி முடிவு என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.இதற்கு, கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பதிலத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக அதிக இடங்களில் தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில் இந்தியன் எஸ்க்ப்ரஸ் ஊடகத்துக்கு அமித்ஷா பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி வாய்ப்புகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “நாங்கள் தோல்வியை கண்டு அஞ்சமாட்டோம்” என்று பதிலளித்துள்ளார் அமித்ஷா.நீங்கள் வெற்றி பெற்றால் ஆட்சியில் இடம்பெறுவீர்களா என்ற கேள்விக்கு, “ஆமாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அமித்ஷாவின் பேட்டி குறித்து இன்று (ஜூலை 12) கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு “நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேனே… பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். நன்றி! வணக்கம்” என்று கூறியுள்ளார்.
Leave a Reply