விருதுநகரில் ரூ.10,242 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் மித்ரா டெக்ஸ்டைல் பார்க் திட்டம் – அண்ணாமலை

Spread the love

விருதுநகரில் ரூ.10,242 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் மித்ரா (PM MITRA) டெக்ஸ்டைல் பார்க் திட்டம் அமைய உள்ளதாக, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விருதுநகரில் அமையவுள்ள மித்ரா டெக்ஸ்டைல் பார்க், தமிழகத்தின் நெசவுத் துறைக்கு பெரும் வளர்ச்சியை அளிக்கும். திருப்பூர் வளரும்போது, அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரமும் பெருகும். திருப்பூர் பிராண்டுகள் அனைத்தும் சர்வதேச பிராண்டுகளாக மாறும்” என்றார்.

தமிழ்நாடு பாஜகவின் பூத் கமிட்டிகளை ஒருங்கிணைக்கும் சக்தி கேந்திராவின் தலைவராக தன்னை நியமிக்கவில்லை என்ற தகவல்களுக்கு விளக்கம் அளித்த அவர், “தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் எனக்கு எந்த பனிப்போரும் இல்லை. அனைத்துக்கும் இப்போது பதில் அளிக்க முடியாது. தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளதால், பொறுமையாக இருங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் அடுத்தடுத்து பதில் அளிப்பேன். பொறுப்பு முக்கியம் அல்ல; வியூகம் தான் முக்கியம்” என்றார்.

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பேசுகையில், “எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை பார்வையிடவில்லை. மாநில அரசின் எந்த ஒத்துழைப்பும் இன்றி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. பலமுறை மதுரைக்கு சென்ற முதல்வர், கட்டுமானப் பணிகளை பார்வையிட்டிருக்கலாம். மரங்கள் வெட்டுதல், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தில் ஏற்பட்ட தாமதத்திற்கு திமுக அரசே காரணம்” என்றார்.

கேசவ விநாயகம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “கேசவ விநாயகம் அரசியல்வாதி இல்லை. அவரது பணி முடிந்துவிட்டது. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை” என்றார்.

மேலும், சர்வதேச வர்த்தக வரி (Tariff) குறித்து பேசுகையில், “பல உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவுக்கு 18 சதவீத டாரிஃப் கிடைத்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கிடைத்த வெற்றி” என அவர் தெரிவித்தார்.