வாளையார் அருகே ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை பலி

Spread the love

கேரள மாநிலம் வாளையார் வனப்பகுதி அருகே புதன்கிழமை அதிகாலை ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழந்தது. இந்த சம்பவம் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

கோவை மற்றும் பாலக்காடு மாவட்டங்கள் மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ளதுடன், மாநில எல்லைப் பகுதிகளாகவும் விளங்குகின்றன. கோவையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி சுமார் 20 கிலோ மீட்டருக்கு மேல் வனப்பகுதிக்குள் பயணிக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ரயிலில் அடிபட்டு 25-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், தமிழக வனத்துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் இயங்கும் தெர்மல் கேமராக்கள் மதுக்கரை முதல் வாளையார் வரை பொருத்தப்பட்டு, தமிழக எல்லைப் பகுதிகளில் யானைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழக வனப்பகுதிகளில் யானை மரணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.

ஆனால், கேரளா வனப்பகுதிகளில் இதுபோன்ற தெர்மல் கேமராக்கள் இன்னும் பொருத்தப்படாததால், யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இதனால் மேலும் வலியுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை  காலை சுமார் 4.30 மணியளவில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்த கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில், வாளையார் பூங்கா அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 வயது ஆண் யானையின் மீது மோதியது. இதில் யானையின் உடல் சிதறி, சம்பவ இடத்திலேயே அது உயிரிழந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், உயிரிழந்த யானையின் உடல்பாகங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் யானை–ரயில் விபத்துகளைத் தடுக்கும் வகையில், கேரளா வனப்பகுதிகளிலும் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *