“வழக்கு பதிவு செய்தாலே குற்றவாளி அல்ல” – செந்தில் பாலாஜி விளக்கம்

Spread the love
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிப்பது தனது கடமை என தெரிவித்த அவர், விசாரணை தொடங்கிய பின்னரே அது நியாயமான முறையில் நடைபெறுகிறதா என்பது தெளிவாகும் என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான உத்தரவு இன்னும் வெளியாகவில்லை என்றும், தற்போது இறுதி பகுதி மட்டும் வாசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதை தாம் எந்தவித நெருக்கடியாகவும் பார்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற விவகாரங்களை தனியாக பிரித்து, சில அம்சங்களை மறைத்து, சம்பந்தப்பட்ட அமைப்பு சுயமாக செயல்படாமல் அரசியல் நோக்கத்துடன் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, அரசுடன் பேசி மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை பரிசீலிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது என்றும், மக்கள் மன்றத்தில் தங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் அவதூறு பரப்புகின்றனர் என்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.

மேலும், சமீபத்திய தேர்தலை குறிப்பிட்டு பேசிய அவர், சில வாக்குச்சாவடிகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் தாம் வாக்களிக்க செல்லவில்லை என தெரிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் பதவியேற்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், மேற்கு மண்டலத்தில் 35 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் உறுதியாக கூறினார்.

மின்சார வாரியத்தின் டெண்டர் நடைமுறைகள் குறித்து விளக்கமளித்த அவர், 1987ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட நடைமுறைகளே தற்போது தொடரப்படுகின்றன என்றார். டெண்டரில் பல நிறுவனங்கள் பங்கேற்று ஒரே குறைந்த விலையை குறிப்பிடுவது வழக்கமான ஒன்றாகும் என்றும், குறைந்த விலையை ஏற்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை பிரித்து வழங்குவது தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நடைமுறை என கூறினார்.

டெண்டரை இறுதி செய்ய மூன்று குழுக்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், எந்த நடைமுறையும் மாற்றப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் அரசு அல்லது மின்சார வாரியத்திற்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *