மோட்டோ மாணவர் சர்வதேச போட்டியில் ஆசியாவின் முதல் வெற்றி! ஸ்பெயினில் அம்ருதா பல்கலைக்கழகம் சாதனை

Spread the love

ஸ்பெயினின் மோட்டோ லேண்ட் அரகோனில் அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்ற மோட்டோ மாணவர் சர்வதேச போட்டி 2025-ல், அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் மோட்டார் சைக்கிள் பொறியியல் குழுவான மோட்டோ அம்ருதா, ஆசியாவில் இருந்து முதல் குழுவாக புகழ்பெற்ற “பெஸ்ட் ரூகி டீம்” விருதை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

மோட்டார் விளையாட்டு பொறியியல் துறையில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் கலந்து கொள்கின்ற இப்போட்டியின் எட்டாவது பதிப்பில், 20 நாடுகளைச் சேர்ந்த 86 குழுக்கள் பங்கேற்றன. மின்சார மற்றும் முழுமையாக புதுப்பிக்கத்தக்க எரிபொருள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டார் சைக்கிள்களின் வடிவமைப்பு, தயாரிப்பு, பந்தய திறன் ஆகியவற்றில் மாணவர் புதுமை வெளிப்படுத்தும் மேடையாக இந்தப் போட்டி திகழ்கிறது.

அம்ருதா குழுவிற்கு, மோட்டோ எஞ்சினியரிங் பவுண்டேஷன் (MEF) நிர்வாக இயக்குநர் தானியேல் உர்க்கிசு சான்சோ அவர்கள், ஈ-எரிபொருள் பிரிவில் “பெஸ்ட் ரூகி டீம்” விருதை வழங்கினார். இது தொழில்நுட்ப புதுமை, பணி செயலாக்க திறன், நிலைத்தன்மை ஆகியவற்றில் சிறந்த சாதனையாக மதிக்கப்படுகிறது.

மேலும், பொறியியல் வடிவமைப்பு, திட்ட அமலாக்க மதிப்பீடு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பான எம்.எஸ்1 கட்டத்தில் மோட்டோ அம்ருதா குழு உலக அளவில் 14வது தரவரிசை பெற்றது. இது இந்திய தொழில்நுட்ப கல்வித்துறைக்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.

இக்குழுவிற்கு, அம்ருதா விஸ்வ வித்யாபீடம் இயந்திரப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் (மூத்த குழு) திரு. எம். சிவநேசன் அவர்கள் வழிகாட்டியாக இருந்தார்.

ஸ்பெயினில் இந்தியாவின் கொடியை உயர்த்திய மாணவர்கள்:
ஸ்ரீஹரிஷ் ஆர் (தலைவர்), ராகவ் பாலணிகுமார் எஸ் (தொழில்நுட்ப தலைமை), அருண் விஜய் A.R., பி.எல். அஸ்வந்த், மிதுன் K.R., மகாலட்சுமி M.

மாணவர்களின் இந்த உலகளாவிய சாதனை கோயம்புத்தூரையும், இந்திய பொறியியல் துறையையும் பெருமைப்படுத்தும் வகையில் உள்ளது.