முதல் முறையாக பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி கோவையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
அரசியலில் பொது மக்கள் தொடர்பு மிக முக்கியமானதாகும். அவற்றில் பாத யாத்திரை, தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள்,திண்ணைக் கூட்டங்கள், அவரவர் வீடுகளில் சந்திப்பது உள்ளிட்டவர்கள் மூலம், தங்களது கருத்துக்களை கொள்கைகளை பொதுமக்களிடம் எளிதில் கொண்டு செல்லலாம்.
மேலும் இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் உலகில் தொழில் நுட்ப துறை மூலம் பல பரிமாணங்களில் செயலிகள் மூலம் அரசியல் கட்சியினர் நொடி நேரத்தில் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி, அகில இந்திய அளவில் பல யாத்திரைகளை நடத்தி பொதுமக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளது.உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராம ஜென்ம பூமியை மீட்டெடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 1990-ம் ஆண்டு மாபெரும் ரத யாத்திரை நடத்தி, அயோத்தியில் ராமருக்கு ஆலயம் எழுப்பதற்கான விழிப்புணர்வை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற இந்த ரத யாத்திரை பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த ரத யாத்திரைக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி.தமிழகத்திலும் பல தலைவர்கள் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” – என்ற பாத யாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களின் நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு, தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் பெண்களும் இளைஞர்களும் இந்த பாத யாத்திரையில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் பட்டி தொட்டிகளில் எல்லாம் பாரதிய ஜனதா கட்சி பேசு பொருளாக விளங்கியது.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி,பிரதமர் மோடி மக்களிடம் ஆதரவு கேட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்.
என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பல்லடம் அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தொடர்ந்து சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட. நகரங்களிலும் பொது மக்களை சந்தித்து தமது கருத்துக்களை ஆணித்தரமாக வைத்தார்.
சாலை மார்க்கமாக சென்று, மக்களை சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதும்,ஆதரவு திரட்டுவதும் என பிரதமர் மோடி இந்தியாவின் பல நகரங்களில் நடத்தி வருகிறார்.
தென்னிந்தியாவில் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பொதுமக்களை சந்திப்பதற்காக “ரோடு ஷோ” எனப்படும் சாலை மார்க்கமாக காரில் சென்று பொதுமக்களை சந்திப்பது நடைபெற்றுள்ளது.
ஆனால், உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள பிரதமர் தமிழகத்தில் ரோடு ஷோ நிகழ்வில் மார்ச் 18-ம் திங்கட்கிழமை மாலை பங்கேற்பது முதல் முறையாகும்.
பாதுகாப்பு காரணங்களை காட்டி, கோவை மாநகர காவல் சார்பில், பிரதமரின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ரோடு ஷோ அனுமதி கேட்கப்பட்டுள்ள பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் இருப்பதாலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்ற காரணத்தாலும் அனுமதி மறுத்திருந்தனர்.
அனுமதி மறுப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்
ஜெ. ரமேஷ் குமார் அவசர வழக்காக மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், பிரதமர் மக்களை சந்திப்பதற்கு காவல்துறை அனுமதி மறுக்கக்கூடாது, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறி ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கினார்.
18-ம் மாலை 05.45 மணி முதல் 06.45 வரை கோவை கவுண்டம்பாளையம் முதல் ஆர். எஸ். புரம் வரை பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெறுகிறது.
பாஜக மாநில செயலாளர் ஏ. பி. முருகானந்தம், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ. ரமேஷ் குமார், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன், ஜி.கே.செல்வகுமார், பி.எஸ்.செல்வகுமார், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி இணை பொறுப்பாளர் ஏ. டி. ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளில் 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய மேடை போடப்பட்டு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள், கோலாட்டம், கும்மியாட்டம், பரத நாட்டியம்,பொய்க்கால் குதிரை, வாத்தியங்கள், தேச தலைவர்களைப் போல சிறுவர்கள் வேடம் அணிதல் உன்கிட்ட கண்கவர் நிகழ்ச்சிகளின் மூலம் பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் முறையாக ரோடு ஷோ – பெரும் உற்சாகத்தில் கோவை பாஜக

Leave a Reply