கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த 11 அரசு பள்ளிகளில் பயிலும் 55 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய மினி செயற்கைக்கோள் போன்ற வளிமண்டல ஆய்வுக் கருவி, ஹீலியம் பலூன் மூலம் வானில் செலுத்தப்பட்டது. மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் தொழில்நுட்பத் திறனையும் வெளிப்படுத்தும் இந்த முயற்சி பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இரண்டு நாள் விண்வெளி அறிவியல் பயிற்சிப் பட்டறையில், வளிமண்டலத்தின் அடுக்குகள், விண்வெளியில் காணப்படும் நுண் துகள்கள் மற்றும் அவற்றைச் சேகரித்து ஆய்வு செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் மாணவர்கள் மினி செயற்கைக்கோள் போன்ற ஆய்வுக் கருவியை உருவாக்கினர்.
கோவை துடியலூரில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் இருந்து ஹீலியம் பலூன் மூலம் இந்தக் கருவி வானில் செலுத்தப்பட்டது. வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம் ஆகியவற்றைக் கணக்கிடும் உணரிகள் மற்றும் காற்றில் உள்ள நுண் துகள்களைச் சேகரிக்கும் கருவிகள் இதில் பொருத்தப்பட்டிருந்தன. இந்த ஆய்வுக் கருவி சுமார் 35 கிலோமீட்டர் உயரம் வரை சென்று, பின்னர் பாராசூட் உதவியுடன் பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பின்னர், ஆய்வுக் கருவி பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
சேகரிக்கப்பட்ட மாதிரிகளை அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆய்வு செய்து, பூமியின் மேற்பரப்பில் உள்ள நுண் துகள்களுக்கும் வளிமண்டலத்தில் காணப்படும் துகள்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை மாணவர்கள் ஒப்பிட்டு ஆராய உள்ளனர். ஆய்வு முடிவுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிடம் சமர்ப்பிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.



Leave a Reply