மத்திய பட்ஜெட் – கோவையில் அண்ணாமலை விளக்கம்

Spread the love
2026 மத்திய பட்ஜெட்டை விளக்கி, பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். இந்த பட்ஜெட்டில் உட்கட்டமைப்புத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் உட்கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கி வருவதாகவும், இந்த ஆண்டு மட்டும் 14 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார். தமிழக அரசு நான்கு லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், செலவினம் அதிகமாக உள்ளதாக விமர்சித்தார்.

15-வது மற்றும் 16-வது நிதி நிலை குழு பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுள்ளதாகவும், பிரதமர் மோடி பதவியேற்ற பின் மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாய் பங்கீடு 33 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதிக வரி செலுத்தும் மாநிலங்களுக்கு அதிக நிதி கிடைக்கும் வகையில் புதிய முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மக்கள் தொகை, மாநில பரப்பளவு, வரி செலுத்தும் திறன், மக்கள் தொகை கட்டுப்பாடு, இயற்கை வள பாதுகாப்பு உள்ளிட்ட பல அடிப்படைகளில் நிதி பங்கீடு நடைபெறுவதாகவும், இந்த முறையால் தமிழ்நாட்டுக்கு கூடுதல் பயன் கிடைத்துள்ளதாகவும் அண்ணாமலை விளக்கினார்.

இந்த மத்திய பட்ஜெட்டில் பயோ எரிசக்திக்கு 5,000 கோடி ரூபாய், செமிகண்டக்டர் மிஷனுக்கு 40,000 கோடி ரூபாய், எலக்ட்ரானிக் உற்பத்தித் துறைக்கும் 40,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மூன்று வேதியியல் பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை தமிழக அரசு பெற வேண்டும் என்றார்.

டெக்ஸ்டைல் பார்க் திட்டம் தமிழ்நாட்டிற்கு பெரும் பயன் அளிக்கும் என்றும், சிறு-குறு தொழில்களுக்கு மூலதன நிதியாக 10,000 கோடி ரூபாய், குறுந்தொழில்களுக்கு மட்டும் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை முழுமையாக பயன்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விவசாயிகளுக்காக தென்னை மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கோடி விவசாயிகள் இதன் மூலம் பயன் அடைவார்கள் என்றும் கூறினார். 2030க்குள் “இந்தியன் கோகோ” திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

பெண்கள் சுயஉதவி குழுக்கள் மற்றும் பெண்கள் விடுதி திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரயில்வே துறையில் 2026–27 ஆம் ஆண்டுக்காக 7,611 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் ரயில்வே நிலையங்கள் தர உயர்த்தப்படுவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். வந்தே பாரத், அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுவதுடன், சென்னை–பெங்களூரு மற்றும் சென்னை–ஹைதராபாத் ஹைஸ்பீடு ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்றார்.

இந்திய–அமெரிக்க வர்த்தக உறவுகளில் வரி 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டதை வரவேற்ற அவர், இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறினார். 22 நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து குறை கூறும் தமிழக அரசை விமர்சித்த அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தினால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகமாகும் என்றார். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.–பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.