திருக்கோவிலூர் என்னும் ஊரில் வைணவ குடும்பத்தில் பிறந்த முனுசாமிப்பிள்ளை மற்றும் அவரது மனைவி அரங்கநாயகிக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் 3 பெண் பிள்ளைகளும் பிறந்தனர் அந்த ஆண்மக்களில் ஒருவர்தான் மண்ணுருட்டி சுவாமிகள் என்று அழைக்கப்படும் ராமகிருஷ்ணன். இவர் கல்லூரி படிப்பெல்லாம் படித்தவர். கல்லூரி இறுதி ஆண்டில் இவருக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. சிறிதுசிறிதாக உலக வாழ்வில் இருந்து விடுபட்டார். தன் வீட்டு தோட்டத்தில் உள்ள பாம்பு புற்றின் அருகே சென்று காற்றில் ஏதோ பேசுவதும், எச்சிலை தொட்டு ஏதோ கோலங்கள் வரைவதுமாக இருந்த அவரை பார்த்த பெற்றோர்கள் அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறிப்போய், சிதம்பரம் அருகில் உள்ள கொத்தட்டை என்னும் ஊரில் உள்ள அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அந்த அம்மன் கோவிலில் 3 நாட்கள் தங்கி இருந்தால் எப்பேர்ப்பட்ட வியாதியும் குணமாகிவிடும் என்பது அங்குள்ளவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ராமகிருஷ்ணன் அங்கே தீவிரமான ஆத்ம சாதனையில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவரை அந்த கோவிலில் காணாத பெற்றோர்கள் பதறிப்போய் அவரை தேட ஆரம்பித்தனர். ஆனால் அவரோ யாரிடமும் சொல்லாமல் திருவண்ணாமலைக்கு சென்று ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
எப்படியோ அவர் திருவண்ணா மலையில் இருக்கும் விவரம் அவரது பெற்றோர்களுக்கு தெரியவர, அவர்கள் திருவண்ணாமலைக்கு சென்று கெஞ்சி கூத்தாடி அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஊருக்கு வந்தபிறகும் அவரது செய்கைகளில் எந்தவித மாற்றமுமில்லை. தனக்குத்தானே சிரிப்பதும் இயற்கைகளுடன் பேசுவதும் காற்றில் கைகளால் கோலம் போடுவதுமாக இருந்துள்ளார். அவரின் நிலையினை கண்ட பெற்றோர்கள் திரும்பவும் இவருக்கு வைத்தியம் செய்யப்போய் வீட்டைவிட்டு போய் விடக்கூடாதே என அவர் போக்கிலேயே விட்டு விட்டனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணனின் தாயார் காலமாகி விடவே, அவருக்கு செய்ய வேண்டிய இறுதிகாரியங்களை செய்துவிட்டு இந்த மகான் கடலூரை நோக்கி பயணமானார்.
கடலூரில் வீதிவீதி யாக சுற்றி திரிந்தார். யாரேனும் உணவு கொடுத்தால் அதை வாங்கி உண்பார். அதன்பிறகு கடலூரிலிருந்து பாண்டிச்சேரிக்கு பயணமானார். பாண்டிச்சேரியில் சித்தானந்த சுவாமிகளின் ஜீவசமாதி அருகே ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். இவர் தனிமையில் அமர்ந்து தன் சிந்தனையை கட்டுப்படுத்தியவர் என்று சொல்லப்படுகிறது. தனிமையில் அமர்ந்து சிந்தனையை கட்டுப்படுத்தும்போது, ஒரு கையில் மண்ணை வைத்துக்கொண்டு தன் கட்டை விரலால் உருட்டிக்கொண்டு இருப்பார். இதனால் மக்கள் இவரை மண்ணுருட்டி சாமியார் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
அவரை தரிசிக்கவரும் ஆண்களுக்கு மண்ணை எடுத்து கொடுப்பார். அது விபூதியாக மாறும். பெண்களுக்கு மண்ணை எடுத்து கொடுக்கும்போது குங்கும மாக மாறுமாம். சிறுவர்களுக்கு கொடுக்கும்போது மண் மிட்டாயாக மாறிவிடும். இப்படி இருக்கையில் அவருக்கு திடீரென அண்ணாமலையாரின் அழைப்பு கிடைக்க ஆரம்பித்தது, உடனே தனது சீடர்களை அழைத்து தனது இறுதி முடிவை அறிவித்தார். இறுதிக்காலம் நெருங்கியது. மகான் நோய்வாய்ப்பட்டார். அவருக்கு அச்சுதனார் என்னும் டாக்டர் சிகிச்சையளித்தபோது இறுதிக்காலத்தை நெருங்கிய இந்தக் கட்டைக்கு இனி எதற்கு வைத்தியம் என்னை ஜீவரத்தினம் உடையார் வீட்டுக்கு கூட்டிச்செல்லுங்கள் என்று கண்டமங்கலத்தில் உள்ள ஒரு அன்பர் உதவியுடன் குயவர்பாளையத்தில் உள்ள ஜீவரத்தினம் உடையார் வீட்டுக்கு வந்து, அங்க தனது சிஷ்யர்களுக்கு தான் பெற்ற ஞானக்குறிப்புகளைலாம் உபதேசித்தார். பின்னர் 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16 -ம் தேதி மாட்டு பொங்கல் அன்று பரம்பொருளுடன் இரண்டற கலந்தார்.
மண்ணை கொண்டு அருள் தந்த மண்ணுருட்டி சுவாமிகள்

Leave a Reply