அப்போது, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத்தில் ‘என்ஜின் இல்லை’ என விமர்சித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். இரண்டு இயக்கங்களே தொடர்ந்து இந்த நாட்டை ஆள வேண்டுமா, அல்லது புதிதாக ஒருவர் தோன்ற வேண்டுமா என்ற எண்ணத்தோடு தான் இந்த இயக்கம் தற்போது வீரநடை போட்டு வருகிறது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “பல கோடி ரூபாய் வருவாயை இழந்தாலும், மக்கள் சேவை செய்யும் நோக்கில் விஜய் ஒரு இளைஞராக அரசியலுக்கு வந்துள்ளார். அவரைப் பற்றி தொடர்ந்து கருத்துகள் சொல்லப்படுவதற்குக் காரணம் பயமே. வெற்றி என்ற இலக்கை அடைய முடியாத தோல்வி பயம் காரணமாகத்தான் அரசியல் கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் தோல்வி பயம் உருவாகியுள்ளது” என தெரிவித்தார்.
இளைஞர்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் சுமார் 3 லட்சம் தமிழர்கள் தமிழகத்தில் எப்போது தேர்தல் நடைபெறும் என பதிவு செய்துள்ளதாகவும், இது இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையும் என்றும் செங்கோட்டையன் கூறினார். “ஒரு புதிய தலைமை தமிழகத்தை ஆள வேண்டும், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்கக் கூடிய மக்களின் மனங்களில் வலுப்பெற்று வருகிறது. இது 35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களின் ஒருமித்த கருத்தாக பிரதிபலிக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் சில நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, குழந்தைகளே தங்கள் பெற்றோர்களிடமும் பெரியவர்களிடமும் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக மக்கள் எங்களிடம் கூறுகின்றனர். மக்கள் சக்தியால் உருவாகும் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. 2026-ஆம் ஆண்டு விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். 234 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்தை நேரடியாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளதற்கான கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், “அதற்கும் காரணம் அவர்களது தோல்வி பயமே. வெற்றி பெற வேண்டும் என்றால் நேரடியாக திமுகவிடம் பேச வேண்டும். ‘B டீம்’ ஆக யார் செயல்படுகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்துள்ளனர். அதைப் பற்றி கருத்து சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை” எனக் கூறினார்.
மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இரண்டு கட்டங்களாக வெளியிட்டது குறித்து பேசிய அவர், “தேர்தல் அறிக்கை என்பது முழுமையாக ஒரே நேரத்தில் வெளியிடப்பட வேண்டியது. தினமும் சிந்தித்து சிந்தித்து தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறதென்றால், அதில் எவ்வளவு தோல்வி பயம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
இதனிடையே, ஓ. பன்னீர்செல்வத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளிக்கவில்லை.



Leave a Reply