கோவையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி நேரில் சென்று போராட்டக்காரர்களை சந்தித்து ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்தார்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஊழியர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி உறங்கியும், சமையல் செய்து உணவருந்தியும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர்.
சத்துணவு மற்றும் அங்கன் வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ.16,500, அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.15,700 என்ற அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, பத்து ஆண்டுகள் பணி நிறைவு செய்த தகுதியுள்ள பணியாளர்களில் 50 சதவீதம் பேரை நிரந்தரமாக இணைக்க வேண்டும் என்பதுடன், அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோடை விடுமுறை, தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பூதியம், ஓய்வூதியர்களுக்கு அக விலைப்படி, தேசிய மருத்துவ காப்பீடு, 12 மாத மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏழாவது நாளான இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் ஒப்பாரி வைத்து, மடிப்பிச்சை ஏந்தி, தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியாக அளித்தவற்றையே நாங்கள் கேட்கிறோம் என்றும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளவர்களை நேரில் சந்தித்த எஸ்.பி. வேலுமணி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிமுக முழுமையான ஆதரவாக இருக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு பழங்களையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள், 2021ஆம் ஆண்டு திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார். அதன் ஒரு பகுதியாக கோவையில் நடைபெறும் போராட்டத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும் கூறினார்.
இக்கோரிக்கைகள் தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியாரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதையே கேட்கிறார்கள் என்றும், எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாவட்ட ஆட்சியர் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பேச்சு வார்த்தை நடத்தாமல் போராட்டத்தை புறக்கணிப்பது நியாயமல்ல எனவும் அவர் விமர்சித்தார்.
இந்த நிகழ்வின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம், கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்களை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி



Leave a Reply