அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் செல்லும் பக்தர்களுக்காக கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு பெண் திடீரென ஆனைமலை நோக்கி செல்லும் சிறப்பு பேருந்தின் கண்ணாடி மீது கல் எறிந்து உடைத்தார். தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பெண் மனநல பாதிப்புடன் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
ஆனால், நேற்று காலை மீண்டும் அதே பெண் பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கு நின்ற அரசு பேருந்துக்குள் ஏறினார். சிறிது நேரத்தில் டிரைவர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்க முயன்றார். இதை கவனித்த பணியாளர்கள் உடனடியாக பேருந்தின் டயர் கீழ் கற்களை வைத்து தடுத்தனர்.
இதற்கிடையில், அந்த பெண் பேருந்தின் அலாரம் சத்தத்தை தொடர்ந்து எழுப்பியதால், அங்கு இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். சிறிது நேரம் போராட்டத்திற்கு பின்னர், அவரை பேருந்திலிருந்து கீழே இறக்கினர். ஆனால், கீழே வந்ததும் அந்த பெண் பேருந்தின் டயர் கீழ் படுத்து மீண்டும் ரகளையில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக பேருந்து நிலையத்தில் சில நேரம் பரபரப்பு நிலவியது.



Leave a Reply