பொன்ராஜ் மீது நடவடிக்கை கோரி கோவையில் தமிழக வெற்றிக் கழகம் புகார்

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகளை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்ததாக கூறப்படும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகள் குறித்து பொன்ராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படும் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி பலரது கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து கட்சியின் தலைவர் விஜய், டிஜிபி அலுவலகத்தில் நேரடியாக புகார் அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணியினர் பல்வேறு மாவட்டங்களில் புகார் மனுக்கள் அளித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் மற்றும் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் மகளிர் அணியினர் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதுகுறித்து விக்னேஷ் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெண்கள் ஆதரவு அதிகரித்து வருவதால், திமுக மற்றும் அதனை சார்ந்தவர்கள் இதுபோன்ற விமர்சனங்களை முன்வைப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் பெண்களை குறித்து ஆபாசமாக பேசுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொன்ராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.