பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு மக்களுக்கு பெரும் நிவாரணம் – எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

Spread the love

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழ்நிலையால் உலகளவில் எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவின் எரிசக்தி தேவையில் சுமார் 70 சதவீதம் இறக்குமதியை சார்ந்துள்ளதாகவும், குறிப்பாக ஹார்மோஸ் நீரிணை வழியாக வரும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பல நாடுகள் சிக்கலை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.10 குறைத்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்றும், இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் வானதி சீனிவாசன் கூறினார்.

மேலும் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் கடந்த 12 ஆண்டுகளில் 11 கோடி ஏழை பெண்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், எரிசக்தி துறையில் தன்னிறைவு அடைய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை வகித்து வருவதாகவும், கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு சரியான முறையில் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

அதிமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்றும், அனைவரும் இணைந்து கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும், கோவை வடக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *