கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றன என குற்றம் சாட்டி, அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன்குமாரிடம் நேரடியாக புகார் மனு அளித்தார்.
அதில், தொகுதியில் பல்வேறு இடங்களில் ‘பட்டி’ அமைத்து வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அம்மன் அர்ச்சுணன், “கோவையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவது போல் தெரியவில்லை. பல இடங்களில் கூடாரங்கள் அமைத்து மக்களை ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வைத்துள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “ஒரு டிவிஷனில் ஐந்து கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் நடக்கும் முறையை மாநகரத்தில் நடை முறைப்படுத்துகின்றனர். இது மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது” என்றார்.
கோவை தெற்கு மட்டுமின்றி வடக்கு தொகுதியிலும் இது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன என்றும், தி.மு.க போட்டியிடும் பல தொகுதிகளிலும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஒவ்வொரு பட்டியிலும் சுமார் 300 பேரை அடைத்து வைத்து உணவு மற்றும் பணம் வழங்கப்படுகின்றன. எங்கள் ஆதரவாளர்கள் வாக்களிக்க வராமல் தடுக்கவே இவ்வாறு செய்கின்றனர்” என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் ஜனநாயகத்தை நம்பு கிறோம். தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால் மக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். இந்த பட்டி முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.
இந்த புகாரை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், “தேர்தல் காலத்திலும் காவல் துறையினர் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால் சில இடங்களில் அது நடைபெறவில்லை” என குற்றம்சாட்டிய அவர், “தி.மு.க தோல்வி பயத்தில் இப்படியான செயல்களில் ஈடுபடுகிறது” என்றும் விமர்சித்தார்.
“பணத்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் அதற்கு அடிபணிய மாட்டார்கள். ஜனநாயக முறையில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என அம்மன் அர்ச்சுணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பட்டி அமைத்து வாக்காளர்கள் அடைப்பு – செந்தில் பாலாஜி மீது மாவட்ட ஆட்சியரிடன் புகாரளித்த அம்மன் அர்ச்சுணன்



Leave a Reply