கடந்த நவம்பர் மாதத்தில் கத்தார் நாடு இந்திய முட்டைகளுக்கு தடை விதித்தது. அதை தொடர்ந்து , ஓமன் நாடும் இந்திய முட்டைகளுக்கு இரு நாட்களுக்கு முன்பு தடை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முட்டை வகைகளில் ஏஏ வகை 70 கிராம் எடை கொண்டதாக பார்க்கப்படுகிறது. 60 கிராம் எடை கொண்ட முட்டை ஏ ரகமாக கருதப்படுகிறது. 50 கிராம் எடை கொண்ட முட்டைகள் பி ரகமாகவும் அதற்கும் கீழ் எடை கொண்டவை சி ரகமாகவும் கருதப்படுகிறது.
நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் 50 கிராம் எடை கொண்டவை. அதாவது, பி ரகத்தை சேர்ந்தவை. கத்தார் நாடு ஏஏ மற்றும் ஏ ரக முட்டைகளை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இதனால், ஏற்றுமதிக்கான பெர்மிட் மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், கத்தார் நாட்டுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு கோடி முட்டைகள் நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது 15 கோடி முட்டைகள் தேக்கமடைந்து கிடப்பதாக கூறப்படுகிறது .
கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவிடம் இருந்து கத்தார் முட்டை வாங்கி வந்தது . இந்திய முட்டை ஏற்றுமதி சந்தையில் நாமக்கல்தான் 95 சதவிகிதத்தை பூர்த்தி செய்கிறது. இதனால், நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய முட்டைகளின் திக்கான மஞ்சள் நிற கருவுக்காவும் விரைவாக டெலிவரி செய்யப்படுவதாலும் கத்தார் நம்மிடம் இருந்து முட்டைகளை வாங்கி வந்தது.
தற்போது, துருக்கியில் இருந்து முட்டைகளை வாங்க கத்தார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. 360 முட்டைகள் அடங்கிய ஒரு பெட்டியை 28 டாலர்களுக்கு நாம் வழங்கும் போது, துருக்கி 33 டாலர்களுக்கு வழங்குகிறது.
எனினும், கத்தார் நாட்டின் தரக்கட்டுப்பாட்டை துருக்கி முட்டைகள் நிறைவு செய்வதால், அந்த நாட்டு முட்டைகளை இறக்குமதி செய்ய கத்தார் முடிவெடுத்துள்ளது.
கத்தாரை தொடர்ந்து, இந்திய முட்டைகளுக்கு ஓமனும் நேற்று முதல் தடை விதித்திருப்பதால் நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எனவே, நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளின் எடையை 50 முதல் 60 கிராமுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது இதற்காக, உலகளவில் கடைபிடிக்கும் உணவு தர நடைமுறைகளை நாமக்கல் கோழி முட்டை உற்பத்தியாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதாவது கோழிகளை அடைத்து வளர்க்காமல் சுதந்திரமாக சுற்றித்திரிய விட வேண்டும். நல்ல கீரை உள்ளிட்ட உணவு வகைகளை கொடுத்து வளர்க்க வேண்டும். கோழிகள் சுதந்திரமாக சுற்றி வரும் போது, மனமகிழ்வுடன் இருக்கின்றனவாம். அப்படியிடும் முட்டைகள்தான் 70 கிராமுக்கு மேல் எடை கொண்டதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாமக்கல் முட்டைகளுக்கு கத்தாரை தொடர்ந்து ஓமனும் தடை; அது என்ன ஏஏ, ஏ ரக முட்டை?

Leave a Reply