கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் செல்வபுரம் பகுதி அதிமுக செயலாளர் கே. கௌதமன், இளைஞரணி மாவட்ட தலைவரும் பொறுப்பாளருமான வடவள்ளி கருப்புசாமி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச் செயலாளரும் பொறுப்பாளருமான பேரூர் ஜெயபிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செல்வபுரம் பகுதிக்குட்பட்ட சொக்கம்புதூர் ஏ.கே.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எஸ்.பி. வேலுமணி, பின்னர் பேசியபோது, அதிமுக ஆட்சி காலத்தில் இப்பகுதி மக்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்து வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் அந்த வீடுகளுக்கே பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் ஒரு வீடு கூட கட்டி வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி எனக் குறிப்பிட்ட அவர், எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதியின் படி ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் கனவான சொந்த வீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கிராமப்புறங்களில் கான்கிரீட் வீடுகளும் நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்களின் மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லும் போது அவர்களுக்கும் அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக கூறிய அவர், ஜாதி மற்றும் சமுதாய வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்து வருவதாக தெரிவித்தார். சிறுபான்மையின மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக மட்டுமே என்றார். அதிமுக ஆட்சி காலத்தில் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்காக கூடுதல் அரிசி வழங்கியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
மத்திய அரசு ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்தபோது, அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹஜ் பயணிகளுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கினார் என்றும், பின்னர் அந்த தொகையை ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கோவை சுகுணாபுரத்தில் இஸ்லாமிய மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கபர்ஸ்தான் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைத்ததாகவும், குனியமுத்தூர், குறிச்சி, காளவாய் பகுதிகளில் உள்ள கபர்ஸ்தான்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள குளங்கள் மேம்படுத்தப்பட்டதாகவும், தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டதாகவும், அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டதாகவும், அங்கன்வாடி மையங்கள் அதிகரிக்கப் பட்டதாகவும், அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் திமுக ஆட்சி இந்தப் பகுதியையும் கோவை மாவட்டத்தையும் புறக்கணித்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்து அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படும் என கூறினார்.
தொடர்ந்து செல்வபுரம் பகுதிக்குட்பட்ட பழனிச்சாமி காலனி, சண்முகா நகர், ஸ்ரீநகர், இ.பி. காலனி, இந்திரா நகர், கருப்பண்ணன் பாதை, பாலாஜி நகர், மாசாணியம்மன் கோவில் வீதி, எஸ்.ஆர்.எஸ். லேஅவுட், ஜீவா பாதை, அய்யப்பண்ணாடி வீதி மற்றும் மாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த நிகழ்வில் மாவட்ட இணைச் செயலாளர் எஸ். மணிமேகலை, நல்லறம் அறக்கட்டளை தலைவர் சுரேஷ்குமார், சார்பணி மாவட்ட செயலாளர்கள் டி. லட்சுமிகாந்தன், ஆர். சசிகுமார், பகுதி நிர்வாகிகள் கே.ஏ. காட்டுத்துரை, ஜெ. குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் பிரச்சாராத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு வேல் கொடுத்து வரவேற்ற பொதுமக்கள்



Leave a Reply