2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணி தேர்தல் பிரச்சார முன்கள பணியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை முதலிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இளைஞரணி நிர்வாகிகளுடன் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
நிர்வாகிகள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் கோவையில் மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் மாநாடு போல நடத்தப்பட்டதாகவும், தேர்தல் அறிவிப்புக்கு பிறகு இப்போது முக்கியமான கட்டத்தில் மீண்டும் ஆலோசனை நடைபெறுவதாகவும் தெரிவித்தார். வரும் தேர்தலில் திமுக கூட்டணி 100 சதவீத வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்காக இருப்பதாக கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞரணி தீவிரமாக களத்தில் இறங்கி வாக்கு சேகரித்ததன் மூலம் முழுமையான வெற்றி கிடைத்தது என்றும், அதே உற்சாகத்துடன் சட்டமன்றத் தேர்தலிலும் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோவை மட்டுமல்லாமல் முழு மேற்கு மண்டலமும் திமுக கோட்டையாக மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இளைஞரணி நிர்வாகிகள் வீடு தோறும் சென்று மக்களிடம் தொடர்பு கொண்டு தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு இளைஞரணி அமைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் இளைஞரணியை தேர்தல் போருக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுவதாகவும், கலைஞர் கூறிய இலக்குகளை இளைஞரணி நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களை தொடர்ந்து சந்தித்து வந்த முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக காலை உணவு திட்டத்தின் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளதாகவும் கூறினார். ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து இறுதி கட்டத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.



Leave a Reply