தேர்தல் நடத்தை விதிகள் அமல்: கோவையில் அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைப்பு

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி கோவை மாவட்டத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சி அகற்றப்பட்டது. மேலும் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்களும் அகற்றப்பட்டன.

அண்ணா சிலை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் மாநகராட்சி பணியாளர்களால் தார்பாய் கொண்டு மூடப்பட்டன. தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் காலி செய்யப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் மோடி மற்றும் கட்சி சின்னங்கள் கொண்ட புகைப்படங்களும் மறைக்கப்பட்டன.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட பறக்கும் படை வாகனங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியான பவன்குமார் ஆய்வு செய்து பணியில் ஈடுபடுத்தினார்.

தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டு, பேனர்கள் மற்றும் கட்சி கொடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களும் காலி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *