துணைத் தலைவர் வருகை: கோவையில் செப்டம்பர் 20 முதல் ட்ரோன்கள் பறக்கத் தடை!

Spread the love

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி கோவைக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் பொருட்டு கோவை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் தற்காலிகச் சிவப்பு மண்டலங்களாக (Red Zones) அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சிங்காநல்லூர், பீளமேடு, சிட்ரா, சின்னியம்பாளையம், இருகூர், அன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் நீலாம்பூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி மாலை 5 மணி முதல் செப்டம்பர் 22-ஆம் தேதி காலை 11 மணி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) பறக்க முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை மீறிச் செயல்படுபவர்கள் மீது சட்டப்பூர்வமாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மற்றும் மாநகரக் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.