துடியலூரில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

Spread the love

கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற வாகன சோதனையின் போது 12 கிலோக்கும் அதிகமான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நேற்று இரவு சுமார் 12 மணியளவில் கோ-ஆப்ரேட்டிங் வங்கி சப்-ரிஜிஸ்டர் அரவிந்த்குமார், இன்சார்ஜ் பசவகுமார் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையிலான துடியலூர் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் திடீரென போலீசாரைக் கண்டு தப்பி ஓடினர். உடனடியாக ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தியபோது, துடியலூர் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்தபோது இரண்டு பேர் தொப்பம்பட்டி பிரிவு செல்ல வேண்டும் என கூறி ஆட்டோவில் ஏறியதாகவும், போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓடியதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தப்பியோடியவர்கள் ஆட்டோவில் விட்டுச்சென்ற பைகளை சோதனை செய்தபோது, அதில் சுமார் 12 கிலோக்கும் மேற்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தப்பியோடியவர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.