, , ,

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Pavankumar G. Giriyappanavar
Spread the love

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக சட்டப் பேரவையில் 2021-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் துறையின் அறிவிப்பின் படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்களிக்கும் நபர்களுக்காக ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன் பசுமை சாம்பியன் விருது 2021-2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விருது பெறுவதற்காக மாநில அளவில் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. தனிநபர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அமைப்புகள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைப் பொருட்கள் மற்றும் பசுமை தொழில்நுட்பங்களில் மேற்கொண்ட ஆய்வுகள், நீடித்த வளர்ச்சி திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை, நீர்நிலை பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பு, காலநிலை மாற்றத்திற்கேற்ப தகுந்த நடவடிக்கைகள், காற்று மாசு கட்டுப்பாடு,
பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், கடலோர பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் பங்களித்திருக்க வேண்டும்:

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருது வழங்கப்படும். கோவை மாவட்டத்திற்கு மூன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விருதுக்கான விண்ணப்பப் படிவம், தேவையான தகுதிகள் மற்றும் தேர்வு முறையைப் பற்றிய கூடுதல் தகவல்களை www.tnpcb.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை தெற்கு அலுவலகத்திலுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். விண்ணப்பங்களை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும், “என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.