சேற்றில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் யானை உயிரிழப்பு

Spread the love
கோவை, தொண்டாமுத்தூர் அருகே குப்பனூரில் உள்ள தனியார் தோட்டத்தில் கடந்த வாரம் சேற்றில் சிக்கி தவித்த நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட பெண் யானை, தனது வயிற்றில் 13 மாத பெண் கருவுடன் உயிரிழந்த சம்பவம் இயற்கை மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை காப்புக்காடு பகுதியில் உயிரிழந்து கிடந்த சுமார் 50 வயது பெண் யானையின் உடல், மாவட்ட வன அலுவலர் (DFO) ஜெயராஜ் தலைமையில் இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது அந்த யானை கர்ப்பமாக இருந்ததும், அதன் வயிற்றில் 13 மாதங்களே ஆன பெண் யானை கரு இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

உடற்கூறு ஆய்வில், யானையின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உள் உறுப்புகள் கடுமையாகச் சேதமடைந்திருந்தது தெரியவந்தது. மேலும், கடந்த சில வாரங்களாக அந்த யானை உணவு உட்கொள்ளாமல் இருந்ததாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. கர்ப்பம் தரித்த நிலையில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளே யானையின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

உயிரிழந்த இந்த யானை, சில நாட்களுக்கு முன்பு குப்பனூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கி தவித்த போது வனத்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், மீட்கப்பட்ட ஒரு வாரத்திலேயே யானை உயிரிழந்துள்ளதையடுத்து, வனத்துறையின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து வன ஆர்வலர்கள் கடும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

“கர்ப்பிணி யானை மீட்கப்பட்ட பிறகும் அதன் உடல்நிலையை ஏன் முறையாக கண்காணிக்கவில்லை? யானை உணவு உட்கொள்ளாமல் இருந்ததை ஏன் முன்கூட்டியே கண்டறியவில்லை?” என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வயிற்றில் குட்டியுடன் யானை உயிரிழந்த சம்பவம், வனவிலங்கு பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பெரும் தொய்வை வெளிப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

யானைகள் பொதுவாக 21 மாதங்கள் கருவுற்று இருக்கும் நிலையில், 13 மாத கருவுடன் பெண் யானை உயிரிழந்தது வனவிலங்கு பாதுகாப்புத் துறைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னர், யானையின் உடல் அதே வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.