சி.பி இராதாகிருஷ்ணன் குடியரசு தலைவராக கூட வாய்ப்புகள் உள்ளது – கோவையில் வைகொ பேட்டி

Spread the love

சூலூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ, பத்திரிகையாளர் சந்திப்பில் பல்வேறு விஷயங்களைத் தெரிவித்தார்.

சூலூர் கூட்டம் குறித்து
“இன்று நான் பேசும் சூலூர் கூட்டம் ஏழாவது கூட்டமாகும். வரும் 21ஆம் தேதி திருவான்மையூரில் எட்டாவது கூட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழகத்தில் நானும் என் சகாக்களும் எப்படி பாடுபட்டோம் என்பதை இளைஞர்களிடம் எடுத்துச் சொல்கிறோம். ஒவ்வொரு கூட்டமும் எதிர்பாராத அளவுக்கு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது” என அவர் குறிப்பிட்டார்.

சிங்காநல்லூர் தொடர்வண்டி நிறுத்தம்
கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் துரிதத் தொடர்வண்டிகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் பயன்பெறுவதாகவும் வைகோ தெரிவித்தார்.

பாலஸ்தீன பிரச்சினை குறித்து
இஸ்ரேல் தாக்குதலால் 1.65 லட்சம் பாலஸ்தீனர்கள் பலியாகி, 1.10 லட்சம் பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். “பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலைக்குள்ளாகி வருகிறார்கள். இதை கண்டித்தும், தடுத்து நிறுத்தும் நடவடிக்கை எடுக்கவும் இந்திய அரசு முன்வர வேண்டும். பாலஸ்தீனை சுயாட்சி பெற்ற நாடாக ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும்” என வைகோ வலியுறுத்தினார்.

சி.பி. ராதாகிருஷ்ணன் குறித்து
துணைக் குடியரசுத் தலைவராக தேர்வாக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை வாழ்த்திய வைகோ, “அவர் மகாராஷ்டிரா ஆளுநராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்க இருப்பது தமிழர்களுக்கு பெருமை. எதிர்காலத்தில் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது” என்றார்.

பீகார் வாக்காளர் பட்டியல் பிரச்சினை
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என்று வைகோ கண்டனம் தெரிவித்தார். “இண்டி கூட்டணி தலைவர்கள் இதற்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வாக்காளர் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்” என்றார்.

மற்ற விடயங்கள்
மதுரையில் தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டம் குறித்தும், தந்தை செய்த வேலையை பிள்ளை செய்ய வேண்டும் என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், “யாருடைய மாநாடு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தமிழகம் தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை மக்கள் மட்டுமே தீர்மானிக்கிறார்கள்” என்றும் வைகோ கூறினார்.