சிறு வியாபாரிகளைப் பாதுகாக்க தனிச்சட்டம் வேண்டும்: விக்கிரமராஜா

Spread the love

பேரூர் வியாபாரிகள் சங்கத்தின் 13-வது பொதுக்குழுக் கூட்டம், சங்க அலுவலக கல்வெட்டு திறப்பு விழா மற்றும் குடும்ப விழா என முப்பெரும் விழா பேரூரில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில், சங்க அலுவலக கல்வெட்டு திறக்கப்பட்டதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரசு அங்கன்வாடி பள்ளிகளுக்கும் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் இணையவழி வர்த்தகத்தால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.

உற்பத்தியாளர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் வெவ்வேறு விலைகளை நிர்ணயிப்பதாகவும், இதனால் சாமானிய வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தமிழகத்தில் ஏரி, குளம், வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீர்நிலைகளைப் பாதுகாப்பது அவசியம் என்றார்.

போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க திறமையான காவல் அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், சிறு வியாபாரிகளின் கடைகளை மட்டும் சீல் வைப்பதற்குப் பதிலாக, புகையிலைப் பொருட்களின் உற்பத்தியிலேயே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்கிரமராஜா தெரிவித்தார்.

“அரசு பதவியேற்று 100 நாட்கள்தான் ஆகியுள்ளன. தொடர்ந்து செயல்படட்டும். அரசின் சாதனைகளைப் பாராட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை விரைவில் முதலமைச்சரை சந்தித்து தெரிவிப்போம்” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *