தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில், கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பெயருடன் சாதி பின்னொட்டு இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்தத் தொகுதி வேட்பாளர் ஸ்ரீநிதி விளக்கம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய 2 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சிங்காநல்லூர் தொகுதிக்கு தேசிய இளைஞரணி செயலாளர் ஸ்ரீநிதி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மாநில இளைஞரணி செயலாளர் சூர்யபிரகாஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஆனால், வெளியிடப்பட்ட பட்டியலில் “ஸ்ரீநிதி நாயுடு” என சாதி அடையாளத்துடன் பெயர் இடம்பெற்றது சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக, மற்ற வேட்பாளர்களில் யாருக்கும் இல்லாத வகையில், இவரது பெயருக்கு மட்டும் சாதி பின்னொட்டு சேர்க்கப்பட்டிருந்தது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதனால் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தி நிலவியது. இரண்டு வேட்பாளர்களையும் மாற்றக் கோரி, கோவை காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும், ஸ்ரீநிதி 2021 சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். பின்னர் பாஜக மற்றும் அதிமுகவுடன் தொடர்பில் இருந்து, 2023ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது பெயருடன் சாதி பின்னொட்டு இணைக்கப்பட்ட விவகாரம் குறித்து ஸ்ரீநிதி விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“எனது பெயருடன் சாதிய அடைமொழி இணைக்கப்பட்டதை பார்த்ததும் எனக்கே அதிர்ச்சி ஏற்பட்டது. அது தட்டச்சு பிழையால் ஏற்பட்டது. என் அடையாளம் என் தந்தையின் பெயரும், என் கல்வி தகுதியும் தான். சாதி, மத பேதமற்ற சமத்துவமே எனது கொள்கை. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.



Leave a Reply