ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் ஒமைக்ரான் வைரஸின் புதிய உருமாற்றமான ‘சிக்காடா’ வேகமாகப் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி, உலக சுகாதார அமைப்பின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த கொரோனா வைரஸ், தற்போது புதிய வடிவில் மீண்டும் உருவெடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டு மறைந்து போனதாகக் கருதப்பட்ட ஒமைக்ரானின் பிஏ3 பிரிவிலிருந்து இந்த புதிய வைரஸ் உருமாறி உருவாகியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘சிக்காடா’ என்ற பூச்சி பல ஆண்டுகள் மண்ணுக்குள் மறைந்திருந்து பின்னர் திடீரென வெளியில் வரும் தன்மை கொண்டது. அதேபோல் இந்த வைரஸும் சுமார் இரண்டு ஆண்டுகளாக செயலிழந்த நிலையில் இருந்துவிட்டு, தற்போது 75க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களுடன் மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த வைரஸின் ஸ்பைக் புரோட்டீனில் 70 முதல் 75 வரை மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், இது முந்தைய வைரஸ்களை விட வேகமாகப் பரவும் திறன் கொண்டதாக இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும், முன்பு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் ஒரு அளவு மீறி தாக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்காவின் 25 மாநிலங்களிலும், ஐரோப்பாவில் உள்ள ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து உள்ளிட்ட 23 நாடுகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புதிய வைரஸின் அறிகுறிகளாக கடுமையான தொண்டை வலி, அதிக உடல் சோர்வு, லேசான காய்ச்சல், குளிர் நடுக்கம் மற்றும் சிலருக்கு வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகள் காணப்படுகின்றன.
இவ்வாறு வேகமாகப் பரவினாலும், முந்தைய டெல்டா வைரஸைப் போல நுரையீரலை கடுமையாக பாதித்து மரண விகிதத்தை அதிகரிக்கும் அளவிற்கு ஆபத்தானதாக இதுவரை தெரியவில்லை என்பது ஓரளவு நிம்மதி அளிக்கும் தகவலாகும். இருப்பினும் முதியவர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.



Leave a Reply