சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கூறியதாவது:
நேற்று முதல் கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 27,14,676 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்தில் 3,571 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
வாக்காளர்கள் தங்களது விவரங்களை மொபைல் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து பொதுமக்கள் இணையம் வழியாக புகார் அளிக்கலாம். அரசியல் கட்சிகளும் தங்களுக்கான அனுமதிகளை இணையம் மூலமாக பதிவு செய்யலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் செயல்படும். இதற்காக 1800250086 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
மேலும் கோவை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணைய ஒளிபரப்பு வசதி ஏற்பாடு செய்யப்படும். தேர்தலுக்காக 8,334 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5,700 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 5,572 வாக்கு சரிபார்ப்பு இயந்திரங்கள் தயாராக உள்ளன என்றார்.
ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்படும். மாவட்டத்தில் 182 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆவணமின்றி ரூ.50,000 வரை பணம் எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். பின்னர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
மலைப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் எளிதாக செல்லும் வகையில் தேவையான வசதிகள் ஏற்படுத்த வனத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வாக்காளர்களை பாதிக்கும் வகையில் பதிவுகள் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் சான்றிதழ் பெற வேண்டும். இது சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும். சமூக ஊடகங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி தவறான பதிவுகள் வெளியிட்டால் அது குற்றமாக கருதப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் கூறுகையில், தேர்தலை முன்னிட்டு மாநகர காவல்துறை சார்பில் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு – கேரள எல்லையில் 13 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.



Leave a Reply