“சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். பிரிந்து சென்றவர்கள் அல்ல — நீக்கப்பட்டவர்கள்!” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விளக்கம்!

Spread the love

செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதற்கு பதிலளிக்கச் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) பல முக்கியமான கருத்துகளை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:

“கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக செங்கோட்டையனின் நடவடிக்கைகள் கட்சிக்கு எதிரானதாக இருந்தன. ஜெயலலிதா அவர்களின் விசுவாசி என்றால், ஏன் அவரை அமைச்சரவையில் இருந்து விடுவித்தார் என்பதை அவர் விளக்க வேண்டும். நான் முதலமைச்சராக ஆன பின்னரே அவர் மீண்டும் அமைச்சராக ஆனார்.”

எடப்பாடி பழனிசாமி மேலும் கூறினார்:

“ஈரோடு பகுதியில் மாய உலகத்தை உருவாக்கி சிற்றரசராக செயல்பட்டவர் செங்கோட்டையன். ஜெயலலிதா புகைப்படம் இல்லாததால் விழாவில் பங்கேற்கவில்லை என கூறுவது கட்சியை அவமதிப்பதாகும்.”

அவர் தொடர்ந்து,

“குற்றவாளி சசிகலா தப்பித்தது தமிழகம் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சேர்க்க வேண்டுமென செங்கோட்டையன் கூறியவர்கள் — உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் அல்ல.”

“அதிமுகவில் முறையாக உட்கட்சி தேர்தல் நடத்தி நான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவன். அதிமுகவின் சட்ட விதிகளின்படி அனைத்தும் நடக்கிறது என்பதையும் செங்கோட்டையன் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:

“அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அதிமுகவைப் பற்றி பேச டி.டி.வி. தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக ஆட்சியில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது,” எனவும் இ.பி.எஸ். தெரிவித்தார்.

இந்த அறிக்கையின் மூலம், செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி நேரடியாக கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.