கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்

Spread the love

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா, ரமேஷ் ஆகியோர் முகத்தில் கட்சி துண்டை கட்டிக் கொண்டு கூட்ட அரங்கின் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து வீசும் துர்நாற்றம் கோவை புதூர் வரை பரவி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், குப்பை அகற்ற தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியிருந்தும், மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு வாகனங்கள் வாங்க ரூ.25 கோடி செலவிடப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினர். மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்களை சி.பி.ஐ மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சில நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர், அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்ட 119 தீர்மானங்களில், 64வது தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டதுடன், மற்ற தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மேயர் ரங்கநாயகி தெரிவித்தார். மாநகராட்சிக்கு உட்பட்ட 55 சமுதாயக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களை தனியாருக்கு ஏலம் விடும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு எழுந்ததால், அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

முத்தண்ணன் குளம் பகுதியில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுக்கான டர்ஃப் மைதானத்தை தனியாருக்கு ஏலம் விடும் தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சாந்தி எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், அவரது எதிர்ப்பை மீறி அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *