கோவை சோகம்: கழிவுநீர் தொட்டியில் மூழ்கி இருவர் பலி

Spread the love

கோவையில் மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த இருவர், எதிர்பாராதவிதமாக 40 அடி ஆழமுள்ள மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் நிலையத்தில் உள்ள தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, சாய்பாபா காலனி பகுதியிலுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான கழிவுநீர் வெளியேற்றும் நிலையத்தில், நேற்று சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் குமார், பாப்பம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் மோட்டாரில் வால்வு மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது , நிலைதடுமாறி அர்ஜுன் குமார் 40 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற சுரேஷ் குமாரும் நிலைதடுமாறி உள்ளே விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

​40 அடி ஆழம் கொண்ட அந்தத் கழிவு நீர்தொட்டி முழுவதும் கழிவுநீர் நிரம்பி உள்ளதால், உடல்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. சாய்பாபா காலனி காவல்துறையினர், கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து லாரிகள் மூலம் கழிவுநீரை வெளியேற்றும் ‘பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கழிவுநீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட பின்னரே உடல்களை மீட்க முடியும் சூழல் உள்ளது .

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில்பாலாஜி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் உடல்களை மீட்க தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *