கோவை சிறுவாணி சாலையில் பயங்கர விபத்து – புளியமரத்தில் மோதி நான்கு பேர் பலி

Spread the love

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரூர் அருகே உள்ள செட்டிப்பாளையம் பகுதியில் எச்.பி பெட்ரோல் பங்க் அருகே, அதிவேகமாக சென்ற டாட்டா அல்ட்ராஸ் கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இந்த மோதல் பலத்த தாக்கம் ஏற்படுத்தியதால், காரில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் கடுமையாக காயமடைந்த ஒருவரை மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அவர் தற்போது சுயநினைவின்றி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்களில் இருவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஷ் (21) மற்றும் பிரகாஷ் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் பேரூரில் உள்ள கனகஸ்ரீ வாட்டர் வாஷ் மற்றும் பார்க்கிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், விபத்தில் பலியான மற்ற இருவர் சபரி (21) மற்றும் அகத்தியன் (20) எனவும், தீவிர சிகிச்சையில் உள்ளவர் பிரபாகரன் (19) எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கனகஸ்ரீ வாட்டர் வாஷ் உரிமையாளர் மருது மற்றும் மேலாளர் சரவணன் ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புளியமரத்தில் மோதி நான்கு பேர் உயிரிழந்த இந்த பயங்கர விபத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.