கோவையில் ரூ.60 ஆயிரம் லஞ்சம்: வணிகவரித்துறை உதவி ஆணையர்–கணவர் கைது

Spread the love

வணிகவரித்துறை உதவி ஆணையர் மகேஸ்வரி, தனது கணவர் மூலம் ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், கணவன்–மனைவி இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பில் அதிகமாக செலுத்தப்பட்ட input tax தொகையை திரும்பப் பெற, அபினேஷ் என்பவர் வணிகவரித்துறையில் விண்ணப்பம் செய்திருந்தார். அந்த கோப்பை முடித்து வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கோரப்பட்டதாகவும், பின்னர் ரூ.60 ஆயிரமாக தொகை குறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை வழங்க மறுத்த அபினேஷ், கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனப் பொடி தடவிய ரூ.60 ஆயிரம் பணத்துடன் அவர் சென்றுள்ளார். அப்போது, உதவி ஆணையர் மகேஸ்வரி, தனசேகரன் என்பவரிடம் பணத்தை ஒப்படைக்குமாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

கொடிசியா மைதானம் அருகே தனசேகரன் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அங்கு சென்ற அபினேஷ் அவரது காரில் பணத்தை வழங்கினார். உடனே மறைவில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனசேகரனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் உதவி ஆணையர் மகேஸ்வரியின் கணவர் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனசேகரனை வணிகவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, உதவி ஆணையர் மகேஸ்வரியையும் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.