கோவையில் போலீஸார் அதிரடி சோதனை: 14 பேர் கைது!

Spread the love

​கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா, மெத்தாம்பெட்டமைன், போதை மாத்திரைகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் ரெட்டி உத்தரவின்பேரில், கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாலை முதல் இந்தச் சோதனை நடைபெற்றது. கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை, கே.ஜி. சாவடி உள்ளிட்ட 228 இடங்களில் 72 தனிப்படைகளைச் சேர்ந்த 480 காவலர்கள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையின்போது, கஞ்சா​ மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தலைமறைவாக இருந்த இருவர் உள்பட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 கிலோ 702 கிராம் கஞ்சா, 2 கிராம் மெத்தாம்பெட்டமைன், 1,000 போதை மாத்திரைகள் மற்றும் 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 5 செல்போன்கள், 16 இருசக்கர வாகனங்கள், 2 அரிவாள்கள் மற்றும் ரூ.15,000 ரொக்கம் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.