கோவையில் குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

Spread the love
கோவை மாவட்டம் சூலூர் அருகே குளத்தில் மூழ்கி இரண்டு பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகே கண்ணம்பாளையம் டிவிகே நகரைச் சேர்ந்த ரமேஷின் மகன் சுஜித்குமார் (11) மற்றும் யுவராஜின் மகன் பிரதோஷ் (11) ஆகியோர் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

வியாழக்கிழமை காலை அந்த பள்ளியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நடைபெற்றதால், மற்ற வகுப்பு மாணவர்கள் மதியம் பள்ளிக்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு சிறுவர்களும் காலை நேரத்தில் வீட்டிலேயே இருந்தனர்.

காலை உணவு சாப்பிட்ட பிறகு விளையாடச் செல்வதாக பெற்றோரிடம் கூறி வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், மதியம் 1 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

அப்போது கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளத்தில் இரண்டு சிறுவர்கள் சடலமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற சூலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இருந்து சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

பின்னர் அவை பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.