​கோவையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக கட்சியினரே போராட்டம்

Spread the love

கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியினரே கடும் எதிர்ப்பை பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை காமராஜ் பவன் அலுவலகம் முன்பாக கூடிய காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கட்சி மேலிடத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின் போது, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் நிவேதித் ஆல்வா, கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பணமாலை அணிந்திருந்த புகைப்படங்களை கையில் ஏந்தி “எம்.எல்.ஏ சீட்டை விற்காதே, வேட்பாளரை மாற்று” என்று கோஷங்கள் எழுப்பினர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கோவை மாவட்டத்தின் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூரிய பிரகாஷ் மற்றும் சிங்காநல்லூர் தொகுதிக்கு ஸ்ரீநிதி நாயுடு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது, மாற்றுக் கட்சியில் இருந்து வந்த ஸ்ரீநிதி நாயுடுவுக்கு சிங்காநல்லூர் தொகுதி வழங்கியது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், 27 வயதான சூரிய பிரகாஷுக்கு கவுண்டம்பாளையம் தொகுதி ஒதுக்கியதும் சரியல்ல எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

நீண்ட காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட சில நேரங்களிலேயே, அதற்கு எதிராக அக்கட்சியினரே போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *