கோவையில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

Spread the love

கடந்த 10 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடிய சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், 11வது நாளில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், ஊழியர்கள் தினமும் அங்கு தங்கி இரவு முழுவதும் உறங்கி, சமையல் செய்து உணவருந்தி, தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அரசாங்கம் இதுவரை அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்பதால் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகள் காலமுறை ஊதியம் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ.16,500 மற்றும் அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.15,700 என்ற அடிப்படையில் ஊதியம் நிர்ணயித்தல் ஆகியவை. மேலும் கோடை விடுமுறை, தற்காலிக பணிநீக்க காலத்தில் பிழைப்பூதியம், ஓய்வூதியர்கள், தேசிய மருத்துவக் காப்பீடு மற்றும் 12 மாத மகப்பேறு விடுப்பு போன்ற பல நலன்களையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து, தங்களது சீருடைகளால் வாயை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பத்து நாட்களாக போராடிய போதும் அரசாங்கம் பதில் அளிக்கவில்லை என்பதில் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

ஏற்கனவே பெண்களுக்கு ரூ.5,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *