“கரூர் விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடக்கும் என நம்புகிறேன்” – அன்புமணி ராமதாஸ்

Spread the love

கன்னியாகுமரியின் சுவாமிதோப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கரூர் விவகாரத்தில் அஸ்ரா கார்க் தலைமையில் நடக்கும் விசாரணை குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“கரூர் விவகாரத்தை விசாரிக்கும் அஸ்ரா கார்க் நேர்மையான அதிகாரி. அதனால் நேர்மையான விசாரணை நடக்கும் என நம்புகிறேன்,” என அவர் கூறினார்.

மேலும், மவுலிவாக்கம் ஆறு வயது சிறுமி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்தது குறித்து, “இது நீதியின் கறுப்பு நாள். இவ்வாறான மனித மிருகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,” என அவர் கண்டனம் தெரிவித்தார்.

அதேபோல், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பல முறை வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றாததற்கு அரசை விமர்சித்தார்.
69% இடஒதுக்கீடு குறித்த அச்சம் காரணமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் திமுக அரசு தவிர்க்கிறது என்றும் தெரிவித்தார்.

“கடந்த மூன்று ஆண்டுகளில் 1968 விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் விவசாயம் நாசமடைந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இருமடங்காக அதிகரித்துள்ளன. சட்டமும் ஒழுங்கும் இல்லாத ஆட்சி இது,” எனவும் அவர் கூறினார்.

இறுதியாக, “கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று கூறுகிறார்கள், ஆனால் ஊழலில் சிறந்தது தமிழ்நாடு. 2026 தேர்தல் களம் சூடாக இருக்கும், கூட்டணி முடிவுகள் பின்னர் எடுக்கப்படும்,” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.