கரூர் நெரிசல் சோகம்: உயிரிழந்தோர் குடும்பங்களை மாமல்லபுரத்தில் சந்தித்து விஜய் ஆறுதல், செலவுகளை ஏற்க உறுதி

Spread the love

கரூரில் தேர்தல் பிரசார நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேரின் குடும்பங்களை, த.வெ.க கட்சித் தலைவர் விஜய் நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.

2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் விஜய். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் பிரசாரங்களில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட நெரிசல் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை விஜய் இதுவரை நேரில் சந்திக்காதது குறித்த விமர்சனங்கள் எழுந்திருந்தன.

பாதுகாப்பு காரணங்களால் நேரடியாக கரூருக்கு செல்ல முடியாத சூழலில், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் குடும்பத்தினரை அழைத்து சந்திக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று (அக்.27) அவர்களை விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அந்த நேரத்தில், மருத்துவச் செலவு, கல்விச்செலவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் ஏற்றுக்கொள்ள தனிப்பட்ட உறுதிமொழி வழங்கியதாக அவரது கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் சோகத்தின் பின்னணியில், உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதலையும் ஆதரவும் வழங்கும் நடவடிக்கை அரசியல் ரீதியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.