கரூரை சேர்ந்தவர்களுக்கு கோவையில் என்ன வேலை – அண்ணாமலை கேள்வி

Spread the love
கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான கருத்துகளை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் உள்ள 40 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என சிலர் பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது உண்மைக்கு புறம்பானது.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க உள்ளேன். இந்த முறை நான் வேட்பாளராக இல்லாத காரணத்தால், தமிழ்நாடு முழுவதும் எங்கு தேவையோ அங்கு சென்று கட்சிக்காக பிரச்சாரம் செய்ய அதிக நேரம் கிடைத்துள்ளது.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் கரூரை சேர்ந்த 18 பேர் சுயேட்சையாக போட்டியிடுவது கேள்விகளை எழுப்புகிறது. கரூரை சேர்ந்தவர்களுக்கு கோவையில் என்ன வேலை என்ற கேள்வியும் எழுகிறது. செந்தில் பாலாஜி அமாவாசை காலத்து டெக்னிக்கை பயன்படுத்தி கோவை தெற்கிற்கு வந்துள்ளார்” என விமர்சித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “FCRA சட்டத்தை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு தான். பின்னர் அதில் சில சிறிய திருத்தங்களை மட்டுமே பாஜக அரசு செய்துள்ளது. ஆனால், அந்தச் சட்டம் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என்று முதல்வர் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார்.

காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடக் கூடாது என திமுகவால் திருமாவளவன் மிரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது நிலைமை தற்போது மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்த தேர்தலில் என்னுடைய பங்கு என்ன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்றார்.