ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நவீன் (37). இவர் தனியார் பால் நிறுவனத்தில் மேலாளராக சென்னையில் பணியாற்றி வந்தார். இதையொட்டி மாதவரத்தில் நவீன் தங்கியிருந்தார். இந்தநிலையில், பால் நிறுவனத்தில் நடந்த ஆடிட்டிங்கில் நவீன், 44.5 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. அதுதொடர்பாக பால் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள், கடந்த 27.6.2025-ம் தேதி கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் புகார் ஒன்றைக் கொடுத்தனர். அதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த தொடங்கியதும் நவீன் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த 9ம் தேதி புழல் காவல் நிலையத்துக்குட்பட்ட பிரிட்டானிய நகர் 1-வது மெயின் ரோட்டில் உள்ள குடிசையில் நவீன் தூக்கில் தொங்குவதாக நவீனின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. புழல் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நவீனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் நவீன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரித்தபோது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தான் வேலை செய்த நிறுவனத்துக்கு இ-மெயில் அனுப்பிய விவரம் கிடைத்தது. அதில் 5 அதிகாரிகளின் மிரட்டலால் இந்த விபரீத முடிவை எடுப்பதாக நவீன் குறிப்பிட்டிருப்பதாக தகவல் உள்ளது.
இதுகுறித்து நவீன் தரப்பில் பேசியவர்கள், “கடந்த 27.4.2022-ம் ஆண்டு முதல் நவீன், பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் 44.5 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக பால் நிறுவனம் தரப்பில் காவல் துறை அதிகாரி ஒருவரிடம் புகாரளிக்கப்பட்டது. அந்த அதிகாரியின் உத்தரவின்பேரில் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் போலீஸார் நவீனிடம் விசாரித்திருக்கிறார்கள். அப்போது நவீன், பணத்தை திரும்ப கொடுப்பதாகக் கூறியபிறகும் விசாரணை என்ற பெயரில் அவருக்கு மனஉளைச்சலை பால் நிறுவன அதிகாரிகளும் காவல்துறையினரும் மிரட்டி வந்துள்ளளர் என்கின்றனர்.
அதனால் நவீன், கடந்த ஜூன் 26ம் தேதி ம் தேதி வங்கி பணபரிவர்த்தனை மூலம் 5 கோடி ரூபாயை திரும்ப கொடுத்தார். பணத்தைத் திரும்ப கொடுத்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பால் நிறுவன அதிகாரிகள் இருவர் நவீனை மிரட்டியிருக்கிறார்கள். அதனால் பயந்து போன நவீன் தன்னுடைய சகோதரிக்கும் பால் நிறுவனத்துக்கும் இ-மெயில் மூலம் தற்கொலை செய்து கொள்ள போகும் தகவலை அனுப்பிவிட்டு விபரீத முடிவை எடுத்திருக்கிறார். சடலமாக மீட்கப்பட்ட நவீனின் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டிருப்பதால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. நவீனை இந்த முடிவை எடுக்க தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
முன்னதாக, நவீன் எழுதிய கடிதத்தில் , என்னுடைய சடலத்திலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இப்போது உங்களால் எதையும் மீட்க முடியாது. எனது மரணம் விரைவில் உங்களை அசைத்து பார்க்கும் என்று கூறியுள்ளார்.
Leave a Reply