“எங்களுக்கு முதன்மை எதிரி திமுக தான்” – அண்ணாமலை பேட்டி கோவையில்!

Spread the love

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து பல முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
“இருமல் மருந்து விவகாரத்தில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மருந்து நிறுவனம் நாடு முழுவதும் மருந்துகளை அனுப்பி வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த குழு ஒன்று வரவுள்ளது, நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.

அத்துடன், “கரூர் சம்பவம் தொடர்பாக நீதி அரசர்கள் விசாரணை நடைபெறும் போது கடுமையான கருத்துகளை கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. தமிழ்நாட்டில் மட்டும் தான் மத்திய அரசை எதிரியாக பார்க்கிறார்கள். ஆளுநர் கேட்கும் கேள்வி சரியானதே. ஆனால் முதலமைச்சர் தொடர்ந்து ஆளுநரை சீண்டுவது சரியல்ல,” என்றும் அவர் தெரிவித்தார்.

விஜய் மீது வழக்கு தொடர்வது குறித்து அவர், “கரூர் விவகாரத்தில் விஜய்யை குற்றவாளியாக மாற்ற முடியாது. அரசியல் காரணத்திற்காக ஒரிரு நாட்கள் கைது செய்தாலும் வழக்கு நிலைக்காது. இதே நிலை திருமாவளவனுக்கும் ஏற்பட்டிருந்தாலும் இதேபோல் கூறியிருப்பேன்,” எனக் கூறினார்.

மேலும், “என் பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டியவர்களுக்கு எதிராக நான் புகார் அளித்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களிடம் என் பெயர் பயன்படுத்தப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு நிதியுதவி செய்த 10 கிலோமீட்டர் மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், “நாட்டின் எந்த பகுதியில் மக்கள் பாதிக்கப்படினாலும் பாஜக குழு செல்ல உரிமை பெற்றுள்ளது. இதற்கு முதலமைச்சர் ஏன் பயப்படுகிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, “எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் திமுகவை வீழ்த்துவது தான் முக்கியம். எங்களுக்கு முதன்மை எதிரி திமுக தான். பாஜகவில் எந்த உள்கழப்பும் இல்லை,” என்று அண்ணாமலை உறுதியாக தெரிவித்தார்.