உலகின் மிகச்சிறந்த ஆசிரியை விருதை வென்ற இந்திய ஆசிரியை

Spread the love

 

துபாயில், நடந்த உலக அரசாங்க உச்சி மாநாட்டில் ஆசிரியர்களுக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படும் ‘உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு’ இந்தியாவைச் சேர்ந்த ரூபிள் நாகி என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

உலகின் சிறந்த ஆசிரியருக்கான பரிசு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட வர்க்கி அறக்கட்டளை நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.கல்வியில் சிறந்த சேவை வழங்கும் ஆசிரியர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும்.

அந்த வகையில் இந்தாண்டு, நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகளிடையே கல்வி அணுகலை மாற்றியமைத்ததற்காக இந்தியாவைச் சேர்ந்த ரூபிள் நாகி என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.ஜம்மு காஷ்மீரில் பிறந்த ரூபிள் நாகி, லண்டனில் கல்வி பயின்றவர்.

சர்வதேச அளவிலான புகழ்பெற்ற கலைஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளரான இவர், இந்தியாவின் குடிசைப் பகுதிகளில் உள்ள சுவர்களில் கல்வி சார்ந்த சித்திரங்களை வரைந்து, அவற்றைத் திறந்தவெளி வகுப்பறைகளாக மாற்றியிருக்கிறார்.

இதன் மூலம், எளிய முறையில் வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணித அறிவை குழந்தைகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.தவிர, ‘ரூபிள் நாகி கலை அறக்கட்டளை’ மூலம் இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கற்றல் மையங்களை உருவாக்கி இருக்கிறார்.

10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்குக் கலை சார்ந்த கல்வியை வழங்கி இருக்கிறார்.